Skip to main content

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம்.
சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.
ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த பாலம் மேலே எப்படி போகுதுன்னு பார்க்கலாம்" என்றான். நங்கள் காத்திருந்தோம். பதினைந்து நிமிடங்கள் கழித்து ரயில் அந்த பாலத்தை கடும் சப்தத்துடன் கடந்தது.
பிறகு தண்டவாளம் நடுவில் நரகலை மிதித்துவிடாமல் நடந்து போய், ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்தோம். ஒரு காப்பியும் ஒரு பன்னும் வங்கி இருவரும் சாப்பிட்டோம். அவனிடம் அவ்வளவுதான் காசு இருந்தது. வெளியில் வரும்போது டிக்கட் கேட்டு பிடித்துக் கொண்டார்கள். அவன் கெஞ்சி அழுது பார்த்தான். பிறகு என்னை மட்டும் போக அனுமதித்தார்கள். நான் இரண்டு மணிநேர தாமதத்தில் பள்ளிக்கு போனேன். வத்சலா டீச்சர் கையை நீட்ட சொல்லி பிரம்பால் அடித்தது. வலியை மூளை வரை செல்ல நான் அனுமதிக்கவில்லை. நான் அழுகிறேனா என்று டீச்சர் உற்று பார்த்தது. இல்லை என்றவுடன் கடுமை மாறாமல் வகுப்பைவிட்டு முணுமுணுத்தபடி வெளியேறியது. நாங்கள் மூன்று பேர் அடைத்துக் கொண்டு நடக்கும் அளவு பருமனுடன் நடந்து போனது. அடிவாங்கியதை விட அதன் பெரும் உருவம்தான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
சித்தப்பா இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. நாங்கள் தேடவும் இல்லை. அது அப்படிதான். அவனுக்கு நினைத்த இடமெல்லாம் வீடு. அரை சந்நியாசி, அரை பைத்தியம். ஒரு வாரம் சென்று சைக்கிளை ஒளித்து வைத்த இடத்தை போய் பார்த்தேன். சைக்கிள் அங்கேயேதான் இருந்தது.

பிறகு நான் அவனை தற்காலிகமாக மறந்து போயிருந்தேன். ஒரு வாரமாக தெரு அக்காள்கள் கூடவும், தனித்தும் பள்ளிக்கூடம் வந்து போய்க் கொண்டிருந்தேன். எல்லாம் நடை பயணம். திடிரென்று அன்று அப்பா பள்ளிகூடத்திலிருந்து அழைத்துசெல்ல வந்திருந்தார். அப்பாவின் சைக்கிள் கேரியரில் அட்டைப் பெட்டிகள் இரண்டு, ஒன்றன் மீது ஒன்று வைத்துக் கட்டப்பட்டிருந்தது. சமையல் ஆர்டருக்கு மளிகை சாமான்கள்.

என் புத்தகப் பையை சைக்கிள் ஹேண்டில்பாரில் நுழைத்து மத்தியில் இருந்த பெரிய நட்டில் அதன் பிடியை மாட்டினேன். அவர் சைக்கிள் சீட்டில் அமர்ந்த பின்னர், முன்னே கம்பியில் அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் தொடை வலிக்கும், மரத்துப் போகும். ஆனால் பசியில் நான்கு கிலோமீட்டர் நடப்பதும் சிரமம். அவருக்கும் எளிது அல்ல, மூச்சு வாங்க மிதித்துக் கொண்டு வந்தார். ஆற்றுப் பாலம் மேடேறும் இடம் வந்தவுடன் சைக்கிள் நின்றது. இருவரும் இறங்கிக் கொண்டு தள்ளியபடி மேடு ஏறத்தொடங்கினோம். இவர் என்னை அழைக்க வராவிட்டாலும் நான் வீடு திரும்பிவிடத்தான் செய்வேன். ஒரு மணிநேரமோ, அல்லது கூடுதலாகவோ தாமதம் ஆகும். ஏன் வந்தார். ஏன் இத்தனை சிரமம்?

தந்தை மகன் பாசம் போல இந்த உலகில் பைத்தியகாரத்தனம் என்ன இருக்க முடியும்? பொதுவாகவே உறவுகளின் மீது பாசம் என்பது என்ன? பைத்தியக்காரத்தனம்தான். எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் பாசத்தை பைத்தியக்காரத்தனம் என்று உணரவே செய்கிறார்கள்.

ஆற்றுப் பாலம் ஏறியதும், அதன் விஸ்தீரணம் மனதுக்கு உற்சாகமாக இருந்தது. மழையில் கழுவப்பட்ட நடைமேடைகள் சுத்தமாக இருந்தன. சைக்கிளை நடைமேடை வழியாக தள்ளிக்கொண்டே நடந்தோம். சற்றுத் தொலைவில் இணையாக ரயில்வே பாலம். அன்று அதன் மிக அருகில் கேட்ட ரயிலின் தடதடப்பு.

ரயில் பாலத்தை நான் வெறித்தபடி நடந்ததை அப்பா பார்த்துவிட்டு "என்னடா அங்கேயே பார்த்துகிட்டு இருக்கே, அந்த பாலம் ஒரு பிசாசு. எத்தனை பேர் தற்கொலை செய்துக்க ரயில் வர்ற நேரம் அதிலே போய் நின்னுருக்கான் தெரியுமா" என்றார். நடையில் அலுப்பு தெரியாமல் இருக்க இப்படி பேய் கதைகள் பேசிக்கொள்வோம்.

"அப்பா, நான் அன்னிக்கு ஒரு நாள் அதில் நடந்துதான் பள்ளிக்கூடம் போனேன். சித்தப்பா அந்த வழியாதான் அழைச்சுகிட்டு போனாரு. ஸ்கூலுக்கு லேட்டாகி, ரெயில்வே போலிஸ் வேற புடிச்சிகிச்சு. டீச்சர் கிட்டேயும் அடிவாங்கினேன்" அப்பா முறைத்தார். என்னையும் சித்தப்பனையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார். அவர் கோபம் பயமாக இருந்தது.

நாங்கள் வீட்டுக்கு போய் குளித்து, உடை மாற்றி திண்ணைக்கு வந்து அமர்ந்த போது இருட்டத் தொடங்கியிருந்தது. ஈசல்களுக்கு பயந்து அந்திப் பொழுதைக் கூட பொருட்படுத்தாமல் அம்மா கதவை சாத்தியிருந்தாள். இரவின் கருமையைப் போல சித்தப்பா மெல்ல வீட்டை நெருங்கி திண்ணை ஓரம் வந்து நின்றான். அப்பா கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். சித்தப்பா என்னை பார்த்து என்னடா ஆச்சு என்றார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. உதட்டை பிதுக்கினேன். உள்ளேயிருந்து அப்பா சக்கரைப் பாகு கிளரும் பெரிய குருப்பியை எடுத்துக் கொண்டு வந்தார். ஓங்கி சித்தப்பாவின் தோளில் அடித்தார். அப்பாவின் பலம் திரண்டு சித்தப்பாவை சிதறடித்தது. ஓலமிட்டுக் கொண்டே ஓட முயன்று வேட்டித் தடுக்கி வீதியில் விழுந்தான். அடுத்து குருப்பி, அவன் முதுகில் விழுந்தது. ஊளையிட்டுக் கொண்டு அழுதபடி ஓடினான்.

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது.
எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை

தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன்.

வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக்க வேண…

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்

களவு காமம் காதல் - வாசிப்பனுபவம்


கதை நேரடியானது. எந்த குழப்பமும் இல்லாமல் முக்கியமாக நான் பயப்படும் குறியீடுகள் இல்லாமல் செல்கிறது.  இதன் முதல் அத்தியாயத்தை ஏற்கனவே சாரு வாசகர் வட்டத்தில் படித்த ஞாபகம்.

நாவலை எடுத்ததும் அதுகுறித்து நான் ஏற்கனவே படித்தது, பேசியது, கேட்டது என்று அனைத்தையும் ஒதுக்கிவிட்டு படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக, புத்தக வெளியீடு அன்று திரு.கரன் கார்கி மற்றும் திரு.(?) அராத்து இருவரும் பேசியது மனதில் சுற்றிகொண்டே இருந்தது. அவற்றை ஏற்று கொண்டுவிட்டால் படிப்பதில் அர்த்தம் இல்லை என்று அவர்கள் சொன்ன கருத்துகளை மறுதலித்துகொண்டே படித்தேன்.

மற்றொன்று, சாம் நாதனின் பேஸ்புக் நிலைதகவல்கள் பாணியில் எழுதப்பட்ட, மனதின் இடையறாத எண்ணங்கள். கதைக்கு தேவையோ இல்லையோ, வாழ்வில் மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் இல்லையா, அதுவும் அதிகம் பேசாதவர்கள் மனம் இடும் கூக்குரல்கள் அப்படியே கதைக்கு பொருந்தும் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். எந்த மூத்த எழுத்தாளரின் பாணி, அல்லது அவர் போல எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியாது.

ரகுவர்த்தன் எழுதிய Quotes மொத்தமும் பொருந்தாமலேயே இருக்கிறத…

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும்.
ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம்.
ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார்.
~ நினைவுப்பாதை, நகுலன்