பிறழ்வு - கதை 1

மென்மையான குரலில் "நீங்கள் ஏன் இறந்து போய்விட கூடாது" என்று கேட்டேன். அதன் அர்த்தம் அவருக்கு உடனே புரிந்தாலும் சற்று தாமதமாக பதில் சொன்னார்.

"என்ன பிரச்சனை வந்தாலும் ஒருவன் இறந்துவிட வேண்டியதில்லை என்பதுதானே நீ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்கிறாய்" என்றார்.

"பிறர் வேறு. அவர்களை நான் நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் கொஞ்சம் பிரயோசனமான வாழ்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போல அல்ல. நீங்கள் மிகவும் பழைய மனிதர். நீங்கள் செய்வது எதுவும் சரியாக செல்லவில்லை. இத்தனை தோல்வியுடன் நீங்கள் வாழ்வது சரியல்ல."

கண்ணாடியில் பிரதிபலித்த கண்களின் ஈரம் கண்ணீராகவும் இருக்கலாம். நான் சொல்ல வேண்டியதின் மிக முக்கியமான செய்தியை சொன்னேன்.

"மேலும், உங்களை சகித்துக் கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உங்களால் நான் அடையும் மன உளைச்சல் மிக அதிகம். உங்கள் மூலம் நரகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அறைக்கு வந்து சேருகிறது."

அவரிடம் நான் சில சிறு விஷகுப்பிகள், வசீகரமான கண்ணாடியில் பிரதிபலிப்பு உள்ள திரவமுடையவை, அந்த அறையில் இருப்பதை சொன்னேன். பிறகு அவர் இறப்பது எனக்கு மகிழ்ச்சி தரப் போவது இல்லை என்று சொன்னேன். நான் விடுதலையை கோரி்தான் அவருக்கு இந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியதை மன்னிப்பு கேட்கும் விதத்தில் விளக்கினேன். அவருக்கு அனைத்தும் புரிந்தது. அமைதியாக என் படுக்கைக்கு திரும்பினேன். அவர் என்ன செய்கிறார் என்பதை மறந்து நான் தூங்கினேன்.

அந்த அறையில் பிணம் நாறுவதை உணர்ந்து என் அண்டை வீட்டுக்கார்கள் எவரேனும் தகவல் சொல்லி என்னை வந்து சுத்தம் செய்துவிட்டு போகலாம். கடைசியாக ஒரு முறை அவர்களுக்கு அந்த துன்பத்தை தருவதை கடவுள் மன்னிக்கட்டும். இறக்கப் போவது அவரோ நானோ, ஆனால் பிறகு நாங்கள் இருவரும் இந்த பூமியில் இருக்கமாட்டோம்

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

பிறழ்வு - கதை 3

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்