பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை. 

மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான்.

இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை.

குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை.

பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன.

ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான்.

எனக்கும், அவனுக்கும் இப்போது கடும் ஆர்வமும், பயமும் அதிகரித்துவிட்டது. ஒரு வாரத்தில் பயம் குறைந்ததும் துப்பறிய கிளம்பினோம். பகலில் மேலே செல்ல முடியவில்லை. மாடிபடியின் மேலே செல்லும் பகுதியை நெஞ்சுவரை பலகை வைத்து மூடியிருந்தார்கள். கதவு போல அல்லாது நிரந்தரமாக.

எல்லோரும் உறங்கியபின் கைப்பிடி மேல் கால்வைத்து தாவி ku
தினேஷ் ரூமில் இருந்த எமர்ஜென்சி லைட்டை எடுத்துகொண்டோம். ஆனால், ஒளிர்விக்கவில்லை. அந்த பழக்கமான மொட்டைமாடி அமானுஷ்யமாக மாறியிருந்தது, பயம், ரகசிய தாளம் போல ஒலிக்கத் தொடங்கியது

மாடியிலிருந்து குதிக்க முன் பகுதிமட்டுமே ஏற்றது. பின்னால் மரங்கள், செடி கொடிகள் அதிகம். இரண்டு பக்கவாட்டு பகுதிகளில் கட்டிட காம்பவுண்டு சுவர் அருகிலேயே இருக்கும். குதித்தால் சுவர் மீது விழவேண்டும். அது ஒன்றும் மரணிக்க சிறந்த இடமில்லை. முன் பகுதி சிமென்ட் சாலை. பெரும்பாலும் சுத்தமாக இருக்கும். தலை மோதினால் மரணம் நிச்சயம்.

இறந்தவர்கள் எளிதாக இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இதே காரணம் இருந்திருக்கலாம். நாங்கள் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு அருகில் நின்று எட்டி பார்த்தோம். எதுவும் வித்தியாசமாக இல்லை. விழுபவர்கள் தப்பித்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி என்றால் விழுபவர்களில் ஒருவர் என்ன ஆகிறார்?

"தெரிஞ்சுக்க ஒரே வழி, குதிச்சு பார்க்கலாமா" என்றான் தினேஷ்

"போடா முட்டா***" கத்திய என் ஆவேசக் குரலில் பயம் அப்பியிருந்தது. அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்ற உந்துதல் அதிகமானது.

தினேஷ் அந்த கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்தான். காலை மடித்து வெளிப்பக்கம் திரும்பினான். என்னை பார்த்து சிரித்தான். "வா... ரெண்டு பேரில் ஒருவர்தானே சாகமுடியும்" என்றான்

"இல்லை. விளையாடாதே. முதலில் இறங்கி வா" என்று கெஞ்சினேன்.

"நானோ, நீயோ தனியாக குதித்தால் சாகமாட்டோம். நீ மட்டும் முயற்சி செய். நிச்சயம் இதில் ஒரு அதிசயம் இருக்கு. உனக்கு பயமென்றால் நான் குதிக்கிறேன். தரையை தொடும் முன் எப்படி தப்ப முடியும் என்பதை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும் இல்லையா?"

நான் பதில் சொல்ல விரும்பவில்லை. " வேண்டாம். கீழே வா... கீழே வா.. " என்று அரற்றியபடி மாடிப்படிகளில் விரைந்து இறங்கினேன். என் அறைவாசலில் தினேஷுக்காக சில நிமிடங்கள் காத்திருந்தேன். குதித்துத் தொலைத்து விட்டானா என்று பயம் தோன்றியது. கீழே இறங்கி ஓடினேன். தரையில் யாரும் சிதறியிருக்கவில்லை. மேலே பார்த்தேன். கைப்பிடி சுவரில் தினேஷ் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொருவன் யார்?. சில நொடிகள்தான் இருவரும் அந்தரத்தை நோக்கித் தாவினார்கள்.

அதிகாலையில் தினேஷின் பிணத்தை வண்டியில் ஏற்றும்போது அந்த இன்னொருவன் என்னவானான் என்றது மனம். நான் அதைப்பற்றி யோசிக்க விரும்பவில்லை. பிண வண்டி புறப்பட்டதும் எனக்காக வந்திருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டேன். என் பெட்டிகளும், பைகளும் நிறைந்து குறுகிய இடத்தில் நெருக்கியபடி அமர்ந்து கொண்டேன். காலின் கீழே மிக அருகில்தான் தரை இருக்கிறது என்று சொல்லிகொண்டேன்

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்