Skip to main content

கடவுளின் கதை - சுயம்பு

(Caution: கடும் இலக்கியத் தரத்துடன் :) )

காலத்தின் முதல் புள்ளிக்கு முன் எதுவுமற்று இருந்தது. அண்டம் இல்லை.  காலம் இல்லை. அசைவு இல்லை. வெளிச்சம், இருள், சப்தம்,  நிசப்தம், வாசனை, சுவை, கடவுள், பேய் எதுவுமில்லை.

யுகங்கள் என்று எதுவும் இல்லாதபோதே, கோடி கோடி யுகங்கள்  கடந்த சூன்யம், அதன் நிச்சலனம் தன் பிரக்ஞை உணர்ந்த  நொடியில் காலம் தோன்றியது.  காலம் தோன்றிய அந்த புள்ளியில் கடவுளும் தோன்றினார்.

பிரக்ஞையின் முதல் புள்ளிதான் கடவுள்.  கடவுளுக்கும் 'தான்' இருக்கிறோமா இல்லையா என்ற மயக்கம்.  'தான்' என்று தோன்றிய முதல் அணு, அல்லது அண்டத்தின் முதல் துகள் கடவுளே,  பூரணமடையாத கடவுள்.

கடவுளுக்கு முதலில் தோன்றிய எண்ணம், தான் தனியாயிருக்கிறோம் என்பதே.  தன்னை சூழ்ந்த நிச்சலனமும், சூன்யமும் கடவுளுக்கு துக்கமாயிருந்தது.  அந்த துக்கம் நீண்டகாலம் தொடர்ந்து இருந்தது.  கடவுள்  தனிமையில் செயலற்று இருத்தல் காலத்தை உறைய வைத்தது.

தன் தனிமையை பொறுக்காத கடவுள், தனக்குத்தானே கவனிக்கத் துவங்கினார்.  அவருக்கு புலன்கள் தோன்றின, உணர்வுகள் தோன்றின, மொழி தோன்றியது.  அதன் மூலம் எதுவுமற்ற கடவுள், தனக்குதானே பேசிக்கொள்ளத் தொடங்கினார்.

அப்படிதான் ஆதியில் கடவுள் கதைசொல்லியாக இருந்தார்.  தனக்குதானே தன் தனிமையை போக்க அவர் கதை சொல்லிகொள்ளத் தொடங்கினார்.  கடவுளின் மனம் போன போக்கில் கதை, கதை போன போக்கில் படைப்பு.  உலகம், உயிர்கள், மனிதர்கள், நேற்று, நாளை எல்லாமே அவன் கதையின் அத்யாயங்கள்.

அவரின் கதையில், பிரபஞ்சத்தில் சௌந்தர்யம் மட்டுமே இருந்தது.  அழகற்றது எதுவும் இல்லை. ஞாபகங்கள், துன்பங்கள், அழிவு, பசி, பிணி, பொறாமை என்று எதிர்மயையானது எதுவுமற்று அனைத்தும் மந்தத் தன்மையுடன் இருந்தன.  பூமியைப் படைத்தபோது பூமிக்கு ஈர்ப்புத்தன்மை இல்லை.

மேகம் மிதப்பது போல பூமியின் பொருட்களான மலை, நதி, வனம், கடல், சமவெளி அனைத்தும் அந்தரத்தில் மிதந்தன.  அந்த வெளியில் கடவுள் நீந்தி செல்கையில், நுகர நறுமணப் பூக்களையும், பல்வேறு பூக்களின் வாசத்தைக் கலக்கச் செய்ய தென்றலையும் உருவாக்கினார்.  உருவாக்குதல் ஒன்றும் அவருக்கு கடினாமாக இல்லை.  தனிச்சையாக கற்பனை செய்தால் போதும்.  தனக்குத் தானே சொல்லிகொள்ளும் கதை நிஜமாக நடக்கும். 

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்