Skip to main content

வாழும் நாகம்

அக்ரகார தெருன்னு பெயரே தவிர, ரெண்டு வீட்டுலதான் அய்யிருங்க இருந்தாங்க. அதுலயும் ஒரு வீட்டுல இருந்த ரங்கு பாட்டி செத்தப்புறம் கொள்ளிபோட்டுப் போனவங்கதான். பெரிய வீடு பாழாகி ராஜநாகம் குடியிருக்கு.

அந்த நாகம் பூமிக்கு கீழே பொந்து வழியா வீடு விட்டு வீடு போகும், வரும். சூட்டுக்காக அடுப்படிக் கீழே படுத்துக் கிடக்கும். அதுக்கு வயசு அதிகம். வீட்டு மனுசாளை ஒன்னும் பண்ணாது. பாழான வீட்டுல எலிபிடிக்க அலையும்.

படையபுரம் அய்யிருங்க, நிலத்தை விட்டுப் பொழைப்பு தேடி கிளம்புறது நாலைஞ்சு வருசமாவே அதிகமாயிடுச்சி. கணக்குபிள்ளை உத்தியோகம் பார்த்துக்கிட்டுருந்த கிட்டு அய்யிரு, உங்ககிட்டப் பேரச் சொல்லிட்டனே தவிர அவருப் பேரை அந்தத் தெருவுல வாய்விட்டு சொல்ல முடியுமா, வேலை போயி, வீட்டுத் திண்ணையில முடங்கின பின்னாடியும் கூட அதிகாரம் ஆகாசத்தைப் பிளக்கும். அவரோட வூட்டுல பைத்தியம். கட்டும்போது நல்லாத்தான் இருந்திச்சு. இவரு மைனரு ஆட்டம் போட்டு, ஊர் பொம்பிளைகளைத் தகராறு பண்ணிக்கப் போயி, அதுக்கு நிம்மதி போச்சு. ஆரம்பத்துல நடிக்கத்தான் செஞ்சுச்சாம். பின்னாடி நிசமாவே கிறுக்குபிடிச்சி போச்சு.

அவரு வீட்டுல அம்சமா ஒரு பசுமாடு இருக்கும். லெட்சுமி அதோட பேரு. பெருசாக் கறவை கிடையாதுன்னாலும் புருஷன் பொஞ்சாதிக்கு மிஞ்சினதில், கொஞ்சம் விலைக்கும் ஊத்துவாரு. கொழந்த இருக்கற வீட்டுல தேடி வந்து வாங்குவாங்க. நான்தான் பால் கறக்கப் போவேன். அந்தம்மா, நல்லா இருந்தப்போ பருத்திக் கொட்டை ஊறபோட்டு, இட்லிக் கல்லுல அதுவே ஆட்டி, மசிச்சி மாடுகளுக்கு வைக்கும். புண்ணாக்கு ஊறப்போட்டு, அதுல அரைச்ச பருத்திகொட்டைக் கலந்து வைக்கும். வெறும் புல்லும், வைக்கோலும் தின்னு வளந்த என் வீட்டு மாட்டை விட இவங்க வீட்டு மாடுங்க அழகா இருக்கக் காரணம் அதுதான்.  இப்போ இங்கே ஒத்த மாடு லெட்சுமியும், அது போட்ட கன்னு வெள்ளியும்தான் கொட்டாயில மிஞ்சிக் கிடக்கு.  ஆனாலும், கறவையில் இதைவிட மூணுபங்கு அதிகம் கறக்குற மாடுங்க என்னுது.

இந்தம்மா, என்னா மனுசி!  மாட்டுக்காக மணிகணக்காக் கல்லு ஆட்டி, பருத்திகொட்டை ரெடி பண்ணும். இவரு எங்கனா மணியாட்ட போய்க் கொட்ட நசுங்கி வருவாரு. என் மாடுங்க கறவைக்குக் கத்துற முன்னாடி கிட்டு ஐயிரு வீட்டு மாட்டைக் கறந்துடலாம்னு போனேன். அவங்க காபியிலே கண்ணு முழிக்கிற ஆளுங்க. பாத்திரமும், வெளக்கெண்ணையும் கொல்லைப் படிகட்டுல காணோம். அய்யிரே என்று ரெண்டுதரம் குரல் கொடுத்த பின்னாடி அந்தம்மா வந்திச்சு. சாமி வந்தவ நடக்குற நடை. இடுப்புச் சிறுத்து, மாருப் பெருகி அம்மனாட்டம் வருது. கன்னத்துலப் போட்டுக்கலாம். அப்படி ஒரு கலை.

கறந்து வச்சிட்டுப் போய்டாத, குரல் கொடு-ன்னுது. பால் ஏனத்துல கொஞ்சம் தண்ணி விட்டுகிட்டு கறக்க ஆரம்பிச்சேன். பாதி நிறைஞ்சதும் கன்னுக்குட்டி அவுத்துப் பால் குடிக்க விட்டேன். அஞ்சு நிமிசம், கன்னுகுட்டிய கட்டிட்டு, பாத்திரம் நிறையிர அளவுக்குப் பாலை கறந்து முடிச்சேன். திரும்பக் கன்னுகுட்டிய அவுத்துவிட்டுடு, 'யம்மா, பாலு இந்தா' என்றதற்கு 'உள்ள வா"ன்னுச்சு.

உள்ளேன்னா, மித்தம் வரைக்கும் போலாம். கொல்லைபடித் தாண்டினால் சின்னதா நடை இருக்கும். பிறகு மித்தம். செவலை பொண்டாட்டி பாத்திரம் தேய்க்க வரும். வீட்டுக்குள்ளேயே அடிபம்புத் தண்ணி. கொடுப்பினைதான். அடிபம்புப் பக்கத்துலேயே குளிக்கிற ரூம்பு. அங்கதான் நின்னுகிட்டு இருந்துச்சி ஐயிரு பொண்டாட்டி அம்மணமா. முதுகுதான் தெரிஞ்சிச்சு. ஆனாலும், சந்தனக் கட்டைல தங்கம் பூசுனாப்ல, அப்படி ஒரு நேக்கு, பளபளப்பு. என்னம்ம்மா என்றபோதே ஆயிரம் யோசனை, நாக்கடியில தித்திப்பு.

ஒரே சூடுடா.... அந்த விளக்கெண்ணெய் எடுத்து முதுகுல சூடு பறக்க தெய்ச்சிவிடு-ன்னுச்சு. தேய்ச்சேன், ஐயிரு எங்கேன்னு கூடக் கேக்கலை. ரூம்பு எதிர் செவுத்துலக் கையை ஊனிகிச்சு. அலுத்தித் தேய்-னுச்சி.  உடம்பு சூடு எங்கை வழியா எனக்குள்ள பரவி கிளர்ந்து நின்னேன். எண்ணை கோடா வழிஞ்சு அதுங்காலுல இறங்குது. ஒவ்வொரு தேய்ப்புக்கும் தேகம் சொக்கபனை போல ஆயிட்டு.

சட்டுன்னு... போதும் போ-ன்னுச்சு. என்னா வியாதியோ, என்னா வைத்தியமோ.  தப்புபண்ணினவன் மாட்டக்கூடாத கணக்கா, கை எண்ணையைக் கூடக் கழுவாம ஓடியாந்தேன்.

மறுநாள் சேவக்கூவுற நேரமிருக்கும்.  வைக்கப்போரில், வைக்கபிரி திரிக்கும் போது கவனிச்சேன். அய்யிரம்மா கோலம் போடுது, நெளி நெளியா சுருண்டு சுருண்டு மையத்தில் படம்விரிஞ்ச நாகக் கோலம்.

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.